அரசு பஸ் ஓட்டுநர் தற்கொலை; விடுமுறை மறுத்ததால் விரக்தி?

பெலகாவி : உயர் அதிகாரி விடுமுறை அளிக்கவில்லை என்பதால், கே.எஸ்.ஆர்.டி.சி., ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.
பெலகாவியின், காந்தி நகரில் வசித்தவர் பாலசந்திர சிவப்பா ஹுக்கோஜி, 47. இவர் கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் பெலகாவி நகரின் பணிமனையில் பஸ் ஓட்டுநராக பணியாற்றினார்.
இவரது அக்காவின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதற்காக சில நாட்கள் விடுமுறை அளிக்கும்படி, பணிமனை மேலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், விடுமுறை அளிக்க மேலாளர் மறுத்தார். பல முறை கேட்டும் பொருட்படுத்தவில்லை. இதனால் மனம் வருந்திய பாலசந்திர ஹுக்கோஜி, நேற்று காலை 7:30 மணியளவில், பணிக்கு வந்து, பணிமனையில் நின்றிருந்த பஸ்சுக்குள் சென்று, கம்பியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், பாலசந்திர சிவப்பா ஹுக்கோஜியின் தற்கொலைக்கு விடுமுறை கிடைக்காதது காரணம் அல்ல. மனைவியின் இம்சையே காரணம் என, பாலசந்திராவின் தாய் எல்லவ்வா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:
என் மகன் பாலசந்திர சிவப்பா ஹுக்கோஜிக்கும், அவரது மனைவி ஷில்பாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்னை இருந்தது. மருமகள் ஷில்பா என்னையும், என் மகளையும் பார்க்கவே கூடாது என, பாலசந்திராவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
எங்களுக்கு சிறு, சிறு உதவிகள் செய்தாலும் தகராறு செய்வார். மனைவியின் சித்ரவதையை தாங்க முடியாமல், என் மகன் இன்று தற்கொலை செய்து கொண்டார். ஷில்பா மற்றும் அவரது தாய் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக, பெலகாவி மார்க்கெட் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணைக்கு பின்னரே, பாலசந்திர ஹுக்கோஜியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் தெரியும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.