ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி; அருணாச்சல பிரதேசத்தில் திட்டம்

இட்டாநகர்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அருணாச்சல பிரதேச அரசு ஒப்புதல் அளித்தது.

அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சி.எம்.பி.எஸ்.எஸ் எனப்படும் முதல்வரின் பால் சேவா திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தால்,தற்போது மாநிலத்தின் 18 வயதுக்குட்பட்ட அனைத்து அனாதை குழந்தைகளும் மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி பெறுவார்கள்.

தகுதியானவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கில் நிதி வழங்கப்படும். இந்த நிதி உதவி, கல்வி, உணவு, உடைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படும். மேலும் குழந்தைகளை சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் சேர்த்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக அமையும்.


ஆரம்பத்தில் கோவிட்-19 காரணமாக அனாதையானவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது பால் ஸ்வராஜ் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட, குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் வசிக்கும், மற்றும் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் கீழ் 'பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள்' என்று அறிவிக்கப்பட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து அனாதை குழந்தைகளையும் உள்ளடக்கும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement