இரவு பொழுதை சாலையில் கழிக்கும் மியான்மர் மக்கள்; தொடர் நிலநடுக்கத்தால் அச்சம்

3


பாங்காக்: நிலநடுக்க பயத்தால், இரவு பொழுதை, மியான்மர் மக்கள் சாலையில் கழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.



தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2,376 பேர் காயமடைந்து உள்ளனர்.

தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கம் பயத்தால், இரவு பொழுதை, மியான்மர் மக்கள் சாலையில் கழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.



சாலைகளில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண பொருட்கள் சென்று அடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேதமடைந்த சாலைகள், இடிபாடுகள் காரணமாக உயிரிழப்புகளை மதிப்பீடும் பணியில் சிரமம் நிலவுகிறது.


வீடுகளுக்கு ஏற்பட்டசேதம் மற்றும் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களிலோ அல்லது திறந்த வெளிகளிலோ இரவுகளை கழிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நெருக்கடியை சமாளிக்க மியான்மர் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதி அளித்துள்ளன.

Advertisement