கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சல்; திருமாவளவன் விரக்தி வீடியோ!

22


சென்னை: ''கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கூடாது'' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. வளர்ச்சி அடைய, வளர்ச்சி அடைய கட்சிக்குள்ளே, முன்னணி தலைவர்கள் இடையே, முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் பிறருக்கு முன் மாதிரியாக அமைய வேண்டும். ஆனால் முன்னணி பொறுப்பாளர்கள் சமூகவலைதளங்களில் கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிடுவது மிகுந்த வேதனையை தருகிறது.


வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்பார்களே, அப்படி பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நாம், கட்சி முன்னணி தோழர்களின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டி இருக்கிறது. வேதனைப்பட வேண்டி இருக்கிறது என்பது தான் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிற ஒன்றாகும்.

முரண்பாடுகள்



நமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள கூடாது. பதிவு செய்ய கூடாது. கடந்த 10 ,15 ஆண்டுகளாக இதை நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இயக்கத்தின் முன்னணி தோழர்கள் யுடியூப் போன்ற சேனல்களில், யாராவது பேட்டிக்கு அழைத்தால், அந்த சேனல் எத்தகைய பின்னணியை கொண்டது. அதை நடத்துகிறவர்கள் யார்?



என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ளாமல், கருத்தில் கொள்ளாமல், ஏதோ ஒரு வாய்ப்பு தருகிறார்கள் என்கிற அடிப்படையில் பங்கேற்பது கவலைக்குரியது ஆகும். பேட்டிக்கு அழைத்தால் கட்சி தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்.

பேட்டி கொடுக்காதீங்க!



பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதே தேர்தலுக்கான சூடு பிடித்துவிட்டது. மனம் போன போக்கில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement