சிம்ரன், ஷ்ரேயஸ் அட்டகாச ஆட்டம் * பஞ்சாப் அணி அமர்க்களம்

லக்னோ: பிரப்சிம்ரன், ஷ்ரேயஸ் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
லக்னோவில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் லக்னோ, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் பெர்குசன், அறிமுக வாய்ப்பு பெற்றார்.
விக்கெட் சரிவு
லக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், அபாயகரமான மிட்சல் மார்ஷை 'டக்' அவுட்டாக்கினார். மீண்டும் வந்த அர்ஷ்தீப் ஓவரில், மார்க்ரம் 3 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் பெர்குசன் பந்தில் பவுண்டரி, சிக்சர் என விளாசிய மார்க்ரம், 28 ரன்னில் (18 பந்து) போல்டானார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட் (2), மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார். லக்னோ அணி 5 ஓவரில் 36/3 ரன் என திணறியது.
பூரன் ஆறுதல்
பின் நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி இணைந்தனர். மேக்ஸ்வெல் வீசிய 7வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார் பூரன். யான்சென் பந்தில் படோனி ஒரு சிக்சர் அடித்தார். சஹால் ஓவரில் பூரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என அடிக்க, 15 ரன் எடுக்கப்பட்டன.
அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் ஓவரில் 6, 4 என ரன் மழை பொழிந்தார் பூரன். இவர் 30 பந்தில் 44 ரன் எடுத்த போது, சஹால் சுழலில் வீழ்ந்தார். லக்னோ அணியின் ஸ்கோர், 13 ஓவரில் 100 ரன்களை (101/4) கடந்தது. யான்சென் 'வேகத்தில்' மில்லர் (18) வெளியேறினார்.
அர்ஷ்தீப் 'மூன்று'
அப்துல் சமத், சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கினார். போட்டியின் 18 வது ஓவரை வீசினார் அர்ஷ்தீப். முதல் பந்தில் படோனி பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என சமத் தொடர்ந்து விளாச, 20 ரன் கிடைத்தன. கடைசி ஓவரில் சுதாரித்துக் கொண்ட அர்ஷ்தீப், படோனி (41), சமத்தை (27) அவுட்டாக்கினார்.
லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது.
பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட் சாய்த்தார்.
பிரப்சிம்ரன் அரைசதம்
பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் (சுருக்கமாக சிம்ரன்), பிரியான்ஷ் ஆர்யா (8) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. பின் பிரப்சிம்ரன், கேப்டன் ஷ்ரேயஸ் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 23 பந்தில் அரைசதம் எட்டினார்.
ஷர்துல் பந்தில் சிக்சர் அடித்தார் ஷ்ரேயஸ். இரண்டாவது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது, பிரப்சிம்ரன் (69) அவுட்டானார். பின் அரைசதம் கடந்த ஷ்ரேயஸ் (52), நேஹல் (43) இணைந்து அணியை வெற்றிபெறச் செய்தனர். பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 177/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
மீண்டும் 'டக்'
லக்னோ வீரர் மிட்சல் மார்ஷ். கடந்த 2023ல் லக்னோவில் நடந்த போட்டியில் முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். நேற்றும் ஏமாற்றிய இவர், முதல் பந்தில் 'டக்' அவுட்டானார்.
17 ரன்
பிரிமியர் ஏலத்தில் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷாப் பன்ட்டை வாங்கியது லக்னோ அணி நிர்வாகம். இத்தொடரில் கேப்டனாக களமிறங்கும் ரிஷாப், முதல் இரு போட்டியில் 0, 15 என ஏமாற்றினார். நேற்றும் 2 ரன்னில் அவுட்டாக, 3 போட்டியில் 17 ரன் (சராசரி 5.66 ரன்) மட்டும் எடுத்துள்ளார்.
* தவிர பிரிமியர் தொடரில் மேக்ஸ்வெல் வீசிய 16 பந்தில் 12 ரன் எடுத்துள்ள ரிஷாப், 3 வது முறையாக அவுட்டானார்.
150 சிக்சர்
நேற்று பெர்குசன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் லக்னோ அணியின் மார்க்ரம். இது 'டி-20' அரங்கில் இவர் அடித்த 150வது சிக்சர் ஆனது. 187 போட்டியில் இந்த இலக்கை அடைந்தார்.
மேலும்
-
தமிழக தீயணைப்பு துறை சார்பில்புதிய வீரர்களுக்கு பயிற்சி தொடக்கம்
-
சாலையோரம் குப்பை குவியல் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
-
பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்
-
சிங்கப்பூர் வேலைக்கு ஆசைப்பட்டு 22 லட்சம் ரூபாய் இழந்த வாலிபர்
-
ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்
-
வரப்பட்டிக்கு அடிப்படை வசதிதேவை: மா.கம்யூ.,வினர் மனு