தேனி வாலிபரிடம் திருமண ஆசை காட்டி ரூ. 88.58 லட்சம் மோசடி நால்வர் கைது

தேனி: தேனி வாலிபரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யக்கூறி ரூ.88.58 லட்சத்தை பெற 2 பெண் கூலித்தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளை முறைகேடாக பெற்று மோசடி செய்த ஈரோடு வி.வி.சி.ஆர்., பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் 30, கிரிணாம்பாளையம் யுவராஜன் 33, சிவா 32, கோவை புதிய காந்திபுரம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த பத்மநாபன் 32, ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனியில் உள்ள ஆலை ஒன்றின் உரிமையாளரின் மகனுக்கு திருமணத்திற்கு பெண் தேடினர். பெண் கிடைக்காத நிலையில் அலைபேசி செயலியில் தொழில் வருமானம் உள்ளிட்டவற்றை பதிவேற்றினர். இதனை கவனித்த ஹரிணி என்ற பெண், வாலிபரை தொடர்பு கொண்டார்.

இவர்கள் தொடர்ந்து 'சாட்டிங்' செய்தனர். பெண்ணின் தந்தை பங்கு சந்தை தொழிலில் நஷ்டமடைவதாக தெரிவித்தார். மேலும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யவும் கூறினார்.

அதனை நம்பி தேனி வாலிபர் ரூ.88.58 லட்சத்தை முதலீடு செய்தார். பிறகு தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த வாலிபர் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பணம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் லட்சுமி, ஆனந்தி ஆகியோர் வங்கி கணக்குகளுக்கு சென்றது தெரிந்தது.

விசாரணையில் இவர்கள் கமிஷன் ரூ.2 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு வங்கி கணக்குகளை துவக்கியதும் தெரிந்தது.

வங்கி விபரங்களை பணம் கொடுத்து ஈரோடு வி.வி.சி.ஆர்., நந்தகோபால் வாங்கியுள்ளார். அந்த வங்கி விபரங்களை அவரிடமிருந்து ஈரோடு யுவராஜன், சிவா, கோவையைச் சேர்ந்த பத்மநாபன் வாங்கினர்.

இவர்கள் கம்போடியா நாட்டில் உள்ள மோசடி கும்பலுடன் தொடர்பில் இருப்பதை தேனி சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து நால்வரையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.3.90 லட்சம், 6 அலைபேசிகள், 29 ஏ.டி.எம்., கார்டுகள், 18 'செக்' புத்தகங்கள், 12 வங்கி கணக்கு புத்தகங்கள், 46 சிம் கார்டுகள், வங்கி விபரங்கள் அடங்கிய 3 நோட்டு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement