பராமரிப்பு இல்லாத செரப்பனஞ்சேரி கோவில் குளம்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில் கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. செரப்பனஞ்சேரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை தோறும் வழிபடுவது வழக்கம்.
அதே போல, இக்கோவிலில் ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவில் எதிரே கோவில் குளம் அமைந்துள்ளது. குளத்தை பாதுகாக்க சில ஆண்டுகளுக்கு முன், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தில் கோரை புற்கள் வளர்ந்து உள்ளன. அதேபோல, குளக்கரையில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தை உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோவில் குளம் துார்ந்து, சீரழியும் அபாய நிலையில் உள்ளது.
எனவே, கோவில் குளத்தை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.