ஏலச்சீட்டில் ரூ.5 கோடி மோசடி கடலுார் ஆசாமி அதிரடி கைது

கடலுார் : கடலுாரில் ஏலச்சீட்டு நடத்தி, ரூ.5 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், கம்மியம்பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் செல்வநாயகம், 49; செம்மண்டலம். குண்டுசாலை ரோட்டில் என்.எச்.ஒ., ஆர்கானிக் ஷாப் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தினார்.

கடந்த 2022ம் ஆண்டு முதல் பொதுமக்களிடம் தீபாவளி சீட்டு, தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்கள் நடத்தி பணம் பெற்றார்.

கடலுார் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புவனகிரி, பண்ருட்டி உட்பட பல பகுதிகளை சேர்ந்த 800 பேர் பணம் செலுத்தினர்.

சீட்டு கட்டியவர்களுக்கு தவணை முடிந்தும் பணம், தங்க காசு, மளிகை பொருட்கள் தராமல் செல்வநாயகம் ஏமாற்றி வந்தார். பாதிக்கப்பட்டவர்கள், அவரது கடைக்கு சென்றபோது, தலைமறைவானார்.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் லிடியாசெல்வி ஆகியோர் வழக்குப் பதிந்து செல்வநாயகத்தை தேடி வந்தனர்.

வெளியூரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தியதில், 5 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.

பின், அவரை கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement