'நமக்கு நாமே' திட்டத்திலும் எமக்கு பயனில்லையே; மீனாட்சி நகர் மக்களின் குமுறலுக்கு தீர்வு கிடைக்குமா

மதுரை : மதுரை கோயில் பாப்பாகுடி ஊராட்சி ஆதித்யா காட்டன் மில் எதிரே உள்ள மீனாட்சிநகர் பகுதியில் மீனாட்சி நகர் மெயின், 1 முதல் 5 குறுக்குத் தெருக்களில் 1500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியின் அவலங்கள் குறித்து குடியிருப்போர் சங்கத்தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காயத்ரி கூறியதாவது:
ரோடுகளால் உடல்வலி
ரோடுகள் சீரற்று வாகனங்கள் செல்லவோ, பாதசாரிகள் நடக்கவோ ஏற்றதாக இல்லை. மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து செல்வதால், புதிய வாகனங்களும் பழுதாகிவிடுகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் சோர்வாகி விடுகின்றனர். மழைக்காலத்தில் குழந்தைகள் வெளியே நடமாடவே முடியாது. வயதானோர் போன்று வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பர்.
கழிவுநீரால் தொல்லை
2021ல் பாதாளச் சாக்கடை அமைக்க அரசு திட்டமிட்டது. அந்த பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் பாதியிலேயே நின்று விட்டது. இதனால் குழாயில் செல்லும் கழிவுநீர் செல்ல வழியின்றி திரும்பி விடுகிறது. வீட்டு வாசலில் தேங்கும் கழிவுநீரால் கொசுத் தொல்லை, நோய்த் தொற்று, துர்நாற்றத்தால் துாங்க முடியவில்லை. 'நமக்கு நாமே திட்ட'த்திற்கு ரூ.2.30 லட்சத்திற்கும் மேல் கொடுத்தும் அதிகாரிகள் திட்டத்தை தொடங்கவில்லை.
குடிநீர் கிடைக்குமா
தினமும் லாரியில் வரும் குடிநீரை குடம் ரூ. 13 க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். தனியார் லாரி எப்போது வரும் எனத் தெரியாது. எனவே வேலையைவிட்டு விட்டு காத்திருக்க வேண்டியுள்ளது. குடிநீருக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் ஏற்பாடு செய்துள்ளனர். கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். தெருவிளக்குகள் இன்றி இரவு நேரம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மாடுகளால் அச்சம்
தெருவில் திரியும் மாடுகளாலும் விபத்துகள் நடக்கின்றன. முரட்டுக் காளைகளால் பெண்கள், சிறுவர்கள் ரோட்டில் நடக்க அச்சப்படுகின்றனர். வீடுகளில் சேரும் குப்பையை தொட்டியில் கொட்டுவதால்நிரம்பி வழிகிறது. வண்டி மூலம் அப்புறப்படுத்தினால் நலமாக இருக்கும். ரோடுகளில் சிதறி கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும். மொத்தத்தில் நகரத்தின் மத்தியில் நரக வாழ்வை அனுபவிக்கிறோம்.