திருப்புவனத்தில் மின்கட்டணம் ரூ.2 கோடி பாக்கி; வசூலிக்க முடியாமல் திணறும் மின்வாரியம்

திருப்புவனம்: திருப்புவனம் மின்வாரியத்திற்கு அரசு, தனியார் நிறுவனங்கள் ரூ.2 கோடி வரை மின்கட்டண பாக்கி வைத்துள்ளதால், கட்டணத்தை வசூலிக்க முடியாமல் மின்வாரியம் திணறி வருகிறது.
திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம் கிழக்கு, மேற்கு, பூவந்தி, கீழடி ஆகிய மின்பகிர்மானங்கள் உள்ளன. இவற்றின் மூலம் வீடுகள், கடைகள், தொழிற்சலைகள், அரசு நிறுவனங்கள் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தாலுகாவில் 46,971 மின் இணைப்புகள் உள்ளன. இதில், விவசாயத்திற்கு மட்டுமே 4,406 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உரிய நேரத்தில் மின் கட்டணங்கள் செலுத்துவது வழக்கம். உரிய காலக்கெடுவில் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு, அபராத தொகையுடன் கட்டணம் செலுத்தியபின் இணைப்பை மீண்டும் பெற்று கொள்ளலாம். ஆனால் அரசு அலுவலகங்களில் உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்லை. வருடக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு மின்வாரியம் சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்புவதுடன் சரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
* 1,232 இணைப்பு மூலம் ரூ.2.21 கோடி பாக்கி:
திருப்புவனம் வட்டாரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் 886 மின் இணைப்புகள் மூலம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரத்து 796, மாநில அரசு அலுவலகங்களில் 259 மின் இணைப்புகள் மூலம் ரூ.58 லட்சத்து 16 ஆயிரத்து 446 என 1,232 மின் இணைப்புகளில் இருந்து ரூ.2 கோடியே 21 லட்சத்து 429 கட்டண பாக்கி வைத்துள்ளனர். பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் உடனடியாக இணைப்பை துண்டிக்கும் மின்வாரியம் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையாக மின் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்ற புகார் உள்ளது. எனவே மின்வாரியம் அனைத்து தரப்பினரிடமும் மின் கட்டணத்தை முறையாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
/////