பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகைப்படத்தால் சர்ச்சை

18

பாட்னா: பீஹாரில் பெண்ணின் தோள் மீது கை வைத்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாட்னாவில், மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


ஒரு பெண் பயனாளிக்கு உதவி வழங்கிய போது, புகைப்படம் எடுப்பதற்காக அவரது தோளைப் பற்றி இழுத்து நிதிஷ்குமார் நிற்க வைத்தார். இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து, அங்குள்ள முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது.



தன் சமூக வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்த அக்கட்சி, 'மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், முதல்வர் நிதிஷ் ஒரு பெண்ணை ஆட்சேபனைக்குரிய வகையில் எப்படி இழுக்கிறார் பாருங்கள். உடல்நிலை சரியில்லாத முதல்வராலும், உதவியற்ற பா.ஜ.,வாலும் பீஹார் அவமானப்படுகிறது' என, குறிப்பிட்டுள்ளது.

Advertisement