துார் வாருவதில் அரசு துறைகள் இடையே நீயா..நானா போட்டி; சுருளியாறு வழித்தடம் மறையும் அபாயம்

கம்பம்: ''சுருளி அருவியில் துவங்கும் சுருளியாற்றை துார் வாருவது வனத்துறையா, நீர்வளத்துறையா என இருதுறை அதிகாரிகள் 'நீயா, நானா' என, போட்டியிட்டுக் கொண்டு, எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.


இதனால் சுருளியாற்றை துார்வாரி சீரமைக்காமல், செடி கொடிகள் வளர்ந்து நீர்வழித்தடம் மறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுருளியாற்றை துார்வாரும் பணிகளுக்கு தீர்வு காண கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சுருளி ஆறு தான் கம்பம் பள்ளத்தாக்கின் பாசனம், குடிநீருக்கு பயன்பட்டு வந்துள்ளது. மேகமலை பகுதியில் இருந்து உருவாகும் சுருளியாறு தற்போதுள்ள அருவி வழியாகவும், வண்ணாத்திப்பாறை வழியாகவும் வருகிறது.

இந்த ஆற்றின் தண்ணீரை வைத்து தான் சுருளியாறு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இன்றைக்கும் ஆண்டு முழுவதும் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரே மின் நிலையமாக சுருளியாறு நீர்மின்நிலையும் இது மட்டுமே.

சுருளி அருவியில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஆறு துவக்கத்திலேயே செடி, கொடிகள் வளர்ந்து, ஆறு இருக்கும் இடம் தெரியாமல் வழித்தடம் மறைந்து வருகிறது. மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், வெள்ள நீர் எளிதாக செல்ல முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.

வனத்துறை, 'சுருளியாற்றை துார் வாருவது எங்கள் வேலையல்ல' எனவும், பொதுப்பணித் துறையோ, 'துார்வார சென்றால் வனத்துறையினர் ஆயிரம் கேள்வி கேட்பார்கள்' என்றும் கூறி தத்தமது பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்றனர். யாருடைய அதிகாரத்தின் கீழ் சுருளியாறு வருகிறது என்பதே தெரியாத நிலை வேறு உள்ளது.

இதற்கு கலெக்டர் இருதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் பாரம்பரியமான ஆற்றை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement