தொடர் விடுமுறையால் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு, : தொடர் விடுமுறை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய குவிந்தனர்.

நேற்று முன்தினம் முதல் இன்று வரை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை உள்ள நிலையில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன் தினம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொல்லம், பொதிகை,சிலம்பு ரயில்கள் மூலம் சென்னை உட்பட வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தனர். அதிகாலை 5:00 மணி முதல் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் தாணிப்பாறை சென்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும் மதியம் 12:00 மணி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.

கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளை வரிசையில் நின்று தரிசித்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Advertisement