ரோட்டோரத்தில் கல்குவாரி விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் தடுப்பு ஏற்படுத்த எதிர்பார்ப்பு

காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சி பூங்காவனத்தம்மன் கோயில் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் ஆபத்தான கல் குவாரிகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி கல்குறிச்சியில் பூங்காவனத்தம்மன், பாரதி நகர் செல்லும் வழியில் கல் குவாரிகள் செயல்பட்டன. 100 அடி பள்ளம் வரை வெட்டி எடுத்ததால் ஆபத்தான பள்ளமாக இருந்தது. மக்கள் அப்பகுதியில் செல்ல அச்சம் ஏற்பட்டதையடுத்து குவாரி நடத்துவதை தடுத்து நிறுத்தினர். செயல்படாமல் உள்ளன. தற்போது மழைக்கு, நீர் நிரம்பி ஆழம் தெரியாத அளவிற்கு ஆபத்தான பள்ளமாக உள்ளது. பூங்காவனத்தம்மன், பாரதி நகருக்கு ஏராளமானோர் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். கல் குவாரிக்கு இருபுறமும் நடுவில் ரோடு செல்கிறது. கார் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இடறி விழும் ஆபத்து உள்ளது. பள்ளத்தில் விழுந்தால் அதோ கதி தான். பலமுறை தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை நீர் நிரம்பி ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். விபத்திற்கு முன் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement