கடலில் சுரங்க பணி : ரத்து செய்ய மோடிக்கு ராகுல் கடிதம்

7

புதுடில்லி 'கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகளில் நடத்த உள்ள, கடல் சுரங்கப் பணிகளுக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு, காங்., - எம்.பி., ராகுல் எழுதியுள்ள கடிதம்:

கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகளில், கடல் படுகையில் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுக்கான டெண்டர் விடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டங்களை செயல்படுத்த, தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது.

ஏற்கனவே அந்த பகுதி மக்கள், இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால், லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அப்பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்காமல், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யாமல், எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது.

கேரளாவின் கொல்லம் அருகே கடலில் மணல் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல, அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடலோரங்களிலும் கனிமங்களை வெட்டி எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடலோரங்களில் செய்யப்படும் மாற்றத்தால், சூறாவளி போன்ற பாதிப்புகள் ஏற்படும் நிலையில், மத்திய அரசின் முடிவு, இந்த பகுதியில் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கடலில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement