உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை தாலுகாவில் உயர்கல்வி பயிலும் மாணவியரை பாராட்டி, கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசியதாவது:

தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐ.டி.ஐ., இளநிலை உயர்கல்வி ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவிகளுக்கு படிப்பிற்கான உதவித்தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மாணவிகள் பயன்பெற தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனங்களிலேயே 'யுஎம்ஐஎஸ்' இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும் மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு அவசியமாகும்.

இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 3,078 உயர்கல்வி பயிலும் மாணவியர் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement