பாசன கால்வாயை சீரமைக்க ஒதுக்கிய ரூ.6 லட்சம் எங்கே போனது: விவசாயிகளே சொந்த செலவில் சீரமைத்த அவலம்

கச்சிராயபாளையம்: கோமுகி அணை பாசன கால்வாயை அதிகாரிகள் சீரமைக்காததால் விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் சீரமைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கச்சிராயபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழில்களையே நம்பி உள்ளனர்.
இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காசோளம், வாழை என பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக கல்வராயன்மலையின் அடிவராத்தில் உள்ள கோமுகி அணை உள்ளது. கோமுகி அணையின் நீர் பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் முழுதும் கோமுகி அணையில் சேகரமாகிறது.
அணையில் சேகரமாகும் நீரானது பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை உள்ள 12 அணை கட்டுகள் மூலம் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீர் ஆதாரம் பெற்று 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் கோமுகி அணையின் புதிய பாசன திட்டத்தில், அணையிலிருந்து 8,917 மீட்டர் துாரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய்கள் மூலம் கச்சிராயபாளையம், வடக்கனந்தல், மாத்துார், மண்மலை, கரடிசித்துார், தாவடிப்பட்டு, செல்லம்பட்டு, மாதவச்சேரி, சிவகங்கை உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. கச்சிராயபாளையம் பகுதியில் கிணற்று பாசன விவசாயிகள் சம்பா, ஆனிகார், மாசிகார் என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கிணறு இல்லாத விவசாயிகள் பலர் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு போகம், சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. புதிய பாசன கால்வாய் திட்டத்தில் ஒரு மெயின் கால்வாய் மற்றும் 3 கிளை கால்வாய்கள் மூலம் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன் பாசன கால்வாய்களில் புதர்களை அகற்றுதல், மதகுகள் சரி செய்தல் மற்றும் கரையை பலப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் பாசன சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு தண்ணீர் திறப்பிற்கு முன் கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையின் கடைமடை பகுதியாக உள்ள கரடிசித்துார், தாவடிப்பட்டு வரை செல்லும் பாசன கால்வாய் பல ஆண்டுகளாக புனரமைப்பு செய்யாமல் உள்ளது. இதனால் கால்வாய்களில் கோரைகள் மற்றும் புதர்கள் மண்டி வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்து நெற்கதிர்கள் முற்றி வரும் நிலையில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இது குறித்து விவசாயிகள் பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பெஞ்சல் புயல் நிவாரண நிதியிலிருந்து கோமுகி அணை பாசன கால்வாயில் 3 இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்ய 6 லட்சம் ரூபாய் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
கால்வாய் சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் உடைப்பை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல் வயல்களுக்கு தண்ணீர் செல்லாததால் நடவு செய்யப்பட்ட வயல்களில் நெற்கதிர்கள் முதிர்ச்சி அடையும் நேரத்தில் தண்ணீர் இன்றி கதிர்கள் கருக துவங்கின.
இதனால், அப்பகுதி விவசாயிகள் தங்களின் சொந்த செலவில் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை தற்காலிகமாக மண் கொட்டி சரி செய்து அதில் தடுப்பிற்காக தகர ஷீட் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பெஞ்சல் நிவாரண நிதியிலிருந்து கோமுகி பாசன கால்வாயை சரிசெய்ய ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி