பழநியில் லைசென்ஸ் இல்லாமல் பேட்டரி வாகனங்களை இயக்கும் செக்யூரிட்டிகள்: முறைப்படுத்திட பக்தர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல் : உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பழநி கிரிவலப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்களின் வசதிக்காக கிரிவீதிப் பகுதிகளில் பேட்டரி வாகனங்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன.

நன்கொடையாளர்கள் பலரும் பேட்டரி வாகனங்களை தேவஸ்தானத்திற்கு வழங்கி வருகின்றனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இவற்றை செக்யூரிட்டிகள் தான் ஓட்டுகின்றனர். ஆனால் அவர்களிடம் லைசென்ஸ் உட்பட எந்த ஆவணங்களும் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதில்லை. வாகனம் ஓட்டத்தெரிந்தால் போதும் யார் வேண்டுமானாலும் அந்த பேட்டரி வாகனங்களை இயக்கலாம் என்ற நிலை உள்ளது.

மேலும் அவர்கள் பக்தர்களிடம் மரியாதை குறைவாக நடப்பதாகவும், அலட்சியப்போக்கோடு நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

நேற்று பக்தர்கள் மீது பேட்டரி வாகனம் மோதி விபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பக்தர்கள் கூறியதாவது: இலவசம் என வாகனத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சிலர் பணம் கேட்டு பெறுகின்றனர். மரியாதை குறைவாக நடத்துகின்றனர்.

பக்தர்கள் விரும்பும் இடத்தில் இறக்கி விடுவதும் இல்லை. இவற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள செக்யூரிட்டிகளிடம் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.

Advertisement