பெங்களூரு  - சென்னை நெடுஞ்சாலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி

புதுடில்லி; பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட 20க்கும் அதிகமான நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுதும், தற்போது, 32,500 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

இதை, நடப்பு நிதியாண்டிற்குள் 72,300 ஆக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் மட்டும், 10,000 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு கீழ் நாடு முழுதும், 25,852 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

உத்தர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெரும்பாலான சார்ஜிங் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பி.எம்., - இ டிரைவ் திட்டத்தின் கீழ், 10,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், சார்ஜிங் நிலையங்களுக்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதை அமைக்க 80 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வடகிழக்கு, கடலோர பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளுக்கு மட்டும் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

தற்போது, புதுடில்லி, கொச்சி விமான நிலையங்கள், டெல்லி - ஜெய்ப்பூர் - ஆக்ரா மற்றும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

மேலும் பல விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, மும்பை - புனே, பெங்களூரு - சென்னை உள்ளிட்ட 20க்கும் அதிகமான நெடுஞ்சாலைகளை மத்திய ஆற்றல் அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏலத்தை நடத்தவும், ஆற்றல் அமைச்சகம் இதற்கான நிதியை வழங்கவும் உள்ளன.

Advertisement