அதிபர் டிரம்ப் நலம்; இந்தியா நலமா?

ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினம்! இப்படித்தான் அந்த நாளை உலக மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர்; ஆனால், அதற்கு மறுநாள், ஏப்ரல் 2ம் தேதியைத் தான் தற்போது உலகமே நினைவில் வைத்திருக்கிறது. காரணம், டொனால்டு டிரம்ப் என்ற ஒற்றை மனிதர்.

இரண்டாவது முறையாக, அமெரிக்க அதிபராகி இருக்கும் அவர், அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது உலக நாடுகள் விதிக்கும் சுங்கவரிக்கு பதிலடியாக அந்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அதிக சுங்க வரி விதிக்கும் திட்டத்தை நாளை அறிவிக்க இருக்கிறார். அந்த நாளை, 'விடுதலை தினம்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியைவிட, அந்நாட்டுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் சீனா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை முன்னிலை வகிக்கின்றன. இந்த வரிசையில், இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம்.

டிரம்ப் கூடுதல் வரி விதிப்பதால், நமக்கு என்ன பாதிப்பு; நாம் ஏன் பதற வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக, இந்த பிளாஷ்பேக்...

கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார்.

அலட்சியம்



வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நம்பி அமெரிக்கா இருப்பதை குறைப்பது; உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவது, ஆகிய இரண்டு நோக்கங்களுக்காக, வெளிநாட்டு பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்கவரி அதிகரிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தார். இது அமெரிக்காவின் பூர்வகுடி மக்களை மிகவும் கவர்ந்தது.

அதேநேரம், டிரம்ப் எப்பவுமே இப்படித்தான் பேசுவார். முதலில் அவர் ஜெயித்து வரட்டும்; அப்புறம் பார்க்கலாம்' என்று உலக நாடுகள், அலட்சியமாக இருந்துவிட்டன.

ஆனால், அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், முதல் வேலையாக வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் மீது, 25 சதவீதம் சுங்கவரி விதித்தார்.

இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கம்ப்யூட்டர்களில் தொடங்கி, விளையாட்டு சாதனங்கள் வரை எல்லா பொருட்கள் மீதும் 20.70 பில்லியன் டாலர் கூடுதல் சுங்கவரியை கனடா அரசு அறிவித்தது.

இதேபோல், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது, மோட்டார் சைக்கிள், படகு உட்பட்ட பொருட்கள் மீது 28 பில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் சொன்னது.

இதைத் தொடர்ந்து, சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி விதிக்கும் உத்தரவில், அதிபர் டிரம்ப், பிப்.,1ல் கையெழுத்திட்டார்; அது மார்ச் 2ல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சீனப் பொருட்களுக்கு 10 சதவீதமும், கனடா, மெக்சிகோ நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீதமுமாக கூடுதல் சுங்கவரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் மது, பழங்கள் உட்பட்ட பொருட்கள் மீது, 25 சதவீத சுங்கவரியை கனடா அறிவித்தது.

இதேபோல் கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும் என்று மெக்சிகோ அறிவித்தது. அமெரிக்காவின் கூடுதல் வரியை எதிர்த்து, உலக வர்த்தக நிறுவனத்தில் முறையிடப் போவதாக சீனா தெரிவித்தது.

வெனிசுலா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளின் பொருட்கள் மீது 25 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதில் சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

கேள்விகள்



இந்நிலையில், அமெரிக்கா வுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள், இலகுரக டிரக்குகள் மீது 25 சதவீதம் கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மார்ச் 26ல் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு ஏப்.,3ல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

டிரம்பின் இத்தகைய அதிரடி அறிவிப்புகள் நம்மை பாதிக்குமா என்று பார்ப்போம். டிரம்ப் முதலில் அறிவித்த உருக்கு, அலுமினியம் மீதான சுங்கவரி விதிப்பில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவின் ஆயத்த ஆடைகள், ஜவுளி, மருந்துகள், நகைகள், ஆபரண கற்கள், ரசாயனங்கள், பதப்படுத்திய மீன், இறால் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என தெரிகிறது. எது, எப்படி என்பது நாளை தெரிந்துவிடும்.

தொழில்துறை உற்பத்திகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்கா, கடந்த 30 ஆண்டுகளாக, தமது உற்பத்தி நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வந்தது.

அதன்பிறகே, சீனா உற்பத்தித் துறையில் தறையில் ஆதிக்கம் பெற்றது. ஆனால், இப்போது அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யமுனையும் போது, அதற்கான பணியாட்கள் கிடைப்பார்களா? உற்பத்தி செலவு அதிகமானால் என்ன செய்வது என்ற கேள்விகளும் எழுகின்றன.

அமெரிக்காவில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவை விட, வெளிநாடுகளில் தயாரித்து பெறும்போது, செலவு குறையும். இதனாலேயே, டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே, 'அமெரிக்காவில் உற்பத்தி' என்ற முடிவுக்கு அந்நாட்டின் தொழிலதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உலக நாடுகளிடையே மூன்றாவது உலகப்போர் வருமா என்ற அச்சம் உள்ள சூழலில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், நாளை டிரம்ப் அறிவிக்கப்போகும் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக, வர்த்தகப் போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நமது நாட்டில், சேவைகள் துறையிலிருந்தே அதிகளவில் ஏற்றுமதி அதிகம் நடக்கிறது. இந்த துறைக்கான வரிவிதிப்பு குறித்து தற்போது எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், அந்தத்துறையின் எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்துள்ளது.

தாக்கம்



ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஏனென்றால், இந்தியா, அமெரிக்காவின் நண்பனாக இருக்கிறது. மேலும், இந்தியாவில் டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைவதால், தாக்கம் அதிகம் இருக்காது.

இதுதவிர, மற்ற நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அங்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதால், தங்கள் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், இந்தியா மீது மற்ற நாடுகளுக்கு ஒரு பார்வை உண்டு.

அதனால் இங்கே வர்த்தகம் செய்ய அந்நாடுகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, டிரம்ப் வரி விதிப்புகளால், நமக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றே நம்பலாம்.

Advertisement