ஹிந்து கடவுள் குறித்து அவதுாறு: கேரள கம்யூ., எழுத்தாளரால் சர்ச்சை

32

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஹிந்து கடவுளை மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான்குமார் அவதூறாக பேசியதாக பா.ஜ., மா.கம்யூ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.


அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மா.கம்யூ., சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மா.கம்யூ., ஆதரவு எழுத்தாளர் சீயான் குமார் பரிசு வழங்கி பேசினார்.


அப்போது ஹிந்து கடவுள் குறித்து அவர் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து திரும்பிய எழுத்தாளரின் காரை பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வழிமறித்தனர். மா.கம்யூ., தொண்டர்களும் அங்கு திரண்டனர்.


இரு தரப்பினரும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராபின்சன் 30, என்பவர் காயமடைந்தார். தகவலறிந்து வந்த அருமனை போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு மார்த்தாண்டம் டி.எஸ்.பி., நல்லசிவம் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


விழாவில் பேசப்பட்ட ஆடியோ பரிசோதிக்கப்படும் என்றும், அதில் ஹிந்து கடவுள் பற்றி அவதூறு பேசியிருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.எஸ்.பி., உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Advertisement