அரிசி மாவில் புளி ஆரத்தி, நெய் வழிபாடு தோல் நோயை குணப்படுத்தும் வீரபத்ர சுவாமி

பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவரஹொசஹள்ளி கிராமத்தில் உள்ள மலையில் வீரபத்ரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், எப்போது நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.
இங்கு ஸ்ரீ வீரபத்ரசுவாமி, பத்ரகாளம்மா விக்ரஹங்கள், பாறைகளுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ளன. ஸ்ரீவீரபத்ரசுவாமி மேற்கு நோக்கியும்; ஸ்ரீ பத்ரகாளம்மா எதிர் திசையிலும் அருள்பாலிக்கின்றனர்.
வீட்டு தெய்வம்
ஜாதி, மத வேறுபாடின்றி, அனைத்து மக்களும் தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். திருமணம், பிள்ளை பேறு உட்பட மனமுருகி வேண்டினால், சுவாமியின் அருகில் தண்ணீர் விழும்.
இதனால் தங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அவரை வணங்கிய பின், தங்கள் வீடுகளில் பல நன்மைகள் நடந்ததாக கூறுகின்றனர்.
வீரசைவ ஆகமப்படி, சுவாமிக்கு தினமும் ருத்ராபிஷேகம், வில்வ அர்ச்சனை, குங்கும அர்ச்சனை, மஹா ருத்ராபிஷேகம், நாக பூஜை, கங்கை பூஜைகள் நடக்கின்றன.
கோவில் மலையில் அமைந்திருந்தாலும், சிலைகள் குன்றின் அடியில் அமைந்துள்ளன. மரங்கள் நிறைந்த பாறைகளால், கோவில் சூழப்பட்டு உள்ளது.
இக்கோவில் முன்னர், கல் ஸ்லாப்களால் கட்டப்பட்டிருந்தது. அத்துடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஹிந்து அறநிலைய துறையினால், இக்கோவில் சீரமைக்கப்பட்டது. இங்கு பழங்கால நவக்கிரஹ மண்டபமும், சுவாமியின் சில அவதாரங்களுடன் கூடிய நான்கு கல் துாணும் உள்ளன.
மலைக்கு குறிப்பிட்ட துாரம் வரை வாகனத்தில் செல்லலாம். பின், அங்கிருந்து, படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.
அரிசி மாவு
இங்கு அரிசி மாவில் புளி ஆரத்தி, நெய் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. நவராத்திரி, கார்த்திகை மாதங்களில் சிறப்பு பூஜைகள், லட்சம் தீபம் ஏற்றுதல் நடக்கின்றன. கோவில் உச்சியில் வடகிழக்கில் தெப்பகுளம் அமைந்து உள்ளது. அங்கு நீராடினால், தோல் நோய் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று, அரசு சார்பில் ரத உத்சவம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருவர். தினமும் காலை 7:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
ரயிலில் செல்வோர், தாபஸ்பேட் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து, 15 கி.மீ.,தொலைவில் உள்ள தேவரஹொசஹள்ளி கிராமத்துக்கு செல்ல வேண்டும்.
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தாபஸ்பேட் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள தேவரஹொசஹள்ளி கிராமத்துக்கு செல்லலாம்.
- நமது நிருபர் -
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்