மனைவி, மைத்துனியை தாக்கியவர் தலைமறைவு

ராய்ச்சூர்: ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், ஜீவனாம்சம் கேட்ட முதல் மனைவியை தாக்கிய கணவர் தப்பியோடினார்.

ராய்ச்சூரின் ஏகநுார் கிராமத்தில் வசிப்பவர் திம்மப்பா ஹனுமந்த் யாதவ், 35. இவரது மனைவி பத்மாவதி, 30. தம்பதிக்கு நான்கு குழந்தைகள். குடிப்பழக்கத்துக்கு அடிமையான திம்மப்பா கூலி வேலை செய்கிறார். சூதாட்ட பழக்கமும் இருந்தது.

மனைவி, குழந்தைகள் இருந்தும் வேறு ஒரு பெண்ணை, திம்மப்பா, ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருடன் வசிக்க துவங்கினார். இதையறிந்த மனைவி பத்மாவதி, நீதிமன்றத்தில் முறையிட்டார்.

கணவரிடம் ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி கோரினார். நீதிமன்றம் ஜீவனாம்சம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் திம்மப்பா மறுத்தார். இதனால் அவர் கைதாகி, சமீபத்தில் விடுதலை ஆனார்.

தன்னை சிறைக்கு அனுப்பிய முதல் மனைவியை இம்சிக்க துவங்கினார். பத்மாவதியின் தங்கை ராஜம்மாவுக்கு, திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமண அழைப்பிதழ் கொடுக்க, நேற்று முன் தினம், தன் அக்கா பத்மாவதியின் வீட்டுக்கு வந்திருந்தார்.

இரவு அரிவாளுடன் அங்கு வந்த திம்மப்பா, மனைவியின் மண்டையில் ஓங்கி அடித்தார். தடுக்க வந்த மைத்துனி ராஜம்மாவையும் தாக்கினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் உதவிக்கு வந்தபோது, அவர்களையும் அரிவாளை காண்பித்து மிரட்டிவிட்டு தப்பினார்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ராய்ச்சூர் ஊரக போலீசார், காயமடைந்த பத்மாவதி, ராஜம்மாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்பியோடிய திம்மப்பாவை தேடி வருகின்றனர்.

Advertisement