மாயமான முதியவர் கொலை? விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மாயமான முதியவர் ஓடை தண்ணீரில் எலும்புக் கூடாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தில் உள்ள நரியோடை தண்ணீரில், நேற்று மாலை மனித எலும்புக்கூடு, பழைய சைக்கிள் ஒன்று மூழ்கி கிடந்தன. தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்ற விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு, 75; என்பவரின் சைக்கிள் என்பது தெரிந்தது.

கடந்த 10ம் தேதி அவர் மாயமானது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது சைக்கிளுடன் எலும்புக்கூடு கிடந்ததால், தங்கராசு கொலை செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டாரா அல்லது சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா என கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தண்ணீர் வற்றியதால் தெரிந்த எலும்புக்கூடு



கடந்த 15 நாட்களுக்கு முன் நரியோடையில் தண்ணீர் பாதியளவு இருந்தது. வெயில் தாக்கத்தால், தற்போது ஓடையில் தண்ணீர் வற்றியதால், மூழ்கி கிடந்த எலும்புக்கூடு மற்றும் சைக்கிள் வெளியே தெரிந்துள்ளது.

Advertisement