மகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

பெங்களூரு: ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகளை, மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த பெண் டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெங்களூரு, சம்பங்கிராம்நகரின், சி.கே.சி., கார்டனில் வசிப்பவர் சுஷ்மா, 37. இவர் பல் டாக்டராக பணியாற்றுகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார்.

தம்பதியின் நான்கு வயது மகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2022 ஆகஸ்ட் 4ம் தேதி, மதியம் 3:00 மணியளவில் மகளுக்கு விளையாட்டு காட்டுவதாக நடித்து, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளினார்.

அதன்பின் அலறி, கூச்சல் போட்டு, மகள் கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறி, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்வது போன்று நாடகமாடினார்.

மகளை கீழே தள்ளும் காட்சி, வீட்டின் அருகில் உள்ள கட்டடத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இதை பார்த்த சுஷ்மா, சம்பங்கி ராம்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து, மகளை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகளை, வளர்க்க சுஷ்மா சிரமப்பட்டார். 2022 ஜூலை 20ம் தேதி, மெஜஸ்டிக்கில் மகளை தவிக்கவிட்டு, வீட்டுக்கு வந்தார். மகள் காணாமல் போனதாக குடும்பத்தினரிடம் பொய் சொன்னார்; ஆனால் சுஷ்மாவின் கணவர், போலீசாரிடம் புகார் அளித்து மகளை தேடினார்.

தன்னார்வ தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருந்த மகளை, வீட்டுக்கு அழைத்து வந்நார். ஆனாலும் மகளை வளர்ப்பது, சுஷ்மாவுக்கு கஷ்டமாக தோன்றியது. இதே காரணத்தால் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையை முடித்த போலீசார், பெங்களூரின் 51வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சந்தோஷ், நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement