எம்.எல்.சி., ராஜேந்திராவை கொல்ல முயற்சி பெண் உட்பட மூவரிடம் தீவிர விசாரணை

பெங்களூரு: கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தன்னை ஹனிடிராப் செய்ய முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இதில் காங்கிரசில் உள்ள சிலருக்கு தொடர்பிருக்கலாம் என, மறைமுகமாக சந்தேகம் தெரிவித்தார்.

புகார் வரவில்லை



ராஜண்ணாவுடன், அவரது மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான ராஜேந்திராவையும், ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து, ராஜண்ணா புகார் அளித்தால் விசாரணை நடத்துவதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார். ஆனால், ராஜண்ணா புகார் அளிக்க முன் வரவில்லை. அவரது மகன் ராஜேந்திராவோ, 'என்னை ஹனிடிராப் செய்ய முயற்சிக்கவில்லை. கொலை செய்ய சதி நடக்கிறது' என, துமகூரு எஸ்.பி., யிடம் புகார் அளித்தார்.

விசாரணை நடத்த மதுகிரி டெபுடி எஸ்.பி., மஞ்சுநாத் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவினரும் விசாரணையை துவக்கினர்.

கொலை முயற்சி தொடர்பாக ரவுடி சோமா, பரத், அமித், குண்டா, யதீஷ் உட்பட, சிலர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே ராஜேந்திரா அளித்திருந்த பென் டிரைவில், கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியாகியுள்ளது. ராக்கி, புஷ்பா இடையே உரையாடல் நடந்துள்ளது.

ராஜேந்திராவை கொலை செய்ய, ரவுடி சோமாவுடன் 70 லட்சம் ரூபாய்க்கு புஷ்பா 'டீல்' பேசியுள்ளார். இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியதையும் அவர் விவரித்துள்ளார்.

ராஜேந்திராவின் ஆதரவாளரான ராக்கி, புஷ்பா கூறியதை தன் மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இதை ராஜேந்திராவிடம் கொடுத்துள்ளார்.

ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உஷாராகி துமகூரு எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். ஆடியோவை போலீசார், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்பு



ஆடியோவில் கூறப்பட்ட புஷ்பா உட்பட மூவரை கஸ்டடியில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

கொலை சதிக்கு என்ன காரணம்; இதில் யார், யாருக்கு தொடர்புள்ளது; அமைச்சர் ராஜண்ணாவின் ஹனிடிராப் முயற்சிக்கும், கொலை முயற்சி சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

ரவுடி சோமாவுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. வரும் நாட்களில் துமகூரு மாநகராட்சி தேர்தலிலும் போட்டியிட தயாராவதாக கூறப்படுகிறது.

ஆடியோ வெளியானதும், அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement