பா.ஜ.,வின் எத்னால் காங்கிரசில்...இணைவாரா? இரண்டு தரப்பு தலைவர்களும் மாறி மாறி சந்திப்பு

விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், 'ஹிந்து பயர் பிராண்ட்' என, பிரசித்தி பெற்றவர். எதையும் வெளிப்படையாக பேசுவார். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, சொந்த கட்சித் தலைவராக இருந்தாலும் கடுமையாக விமர்சிக்க தயங்காதவர். இவரால் பா.ஜ., மேலிடம் தர்மசங்கடத்தில் நெளிந்த உதாரணங்கள் ஏராளம்.
அதிருப்தி
கர்நாடகாவில் கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அமைய காரணமாக இருந்த, காங்கிரஸ், ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,,க்களுக்கு, எடியூரப்பா அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதனால் பதவி கிடைக்காமல், எத்னால் ஏமாற்றம் அடைந்தார். அப்போதே அவருக்கு எடியூரப்பா மீது, அதிருப்தி ஏற்பட்டது.
கடந்த 2023ல் காங்கிரஸ் அரசு அமைந்து, பா.ஜ., எதிர்க்கட்சியானது. தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ மாநிலத் தலைவர் பதவியோ கிடைக்கும் என, எத்னால் பெரிதும் நம்பினார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக அசோக், மாநிலத் தலைவராக விஜயேந்திரா அறிவிக்கப்பட்டனர். இதனால் எத்னால் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
குறிப்பாக, தன்னை விட வயதிலும், அரசியல் அனுபவத்திலும் இளையவரான விஜயேந்திரா, மாநிலத் தலைவரானதை எத்னாலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விஜயேந்திரா பொறுப்புக்கு வந்த நாளில் இருந்தே, எத்னால் தீப்பிழம்பாக வார்த்தைகளை வீச துவங்கினார்.
எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சித்த அவர், அதன்பின் கட்சியை பற்றியும் விமர்சித்தார்.
'கட்சியில் பணம் கொடுத்தால் மட்டுமே பதவி கிடைக்கும். என்னிடம் பணம் இல்லை. எனவே பதவி கிடைக்கவில்லை' என, அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
சட்டசபையிலேயே, 'காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி நடக்கிறது. எங்கள் கட்சி தலைவர் ஒருவர், முதல்வர் பதவிக்காக 1,000 கோடி ரூபாய் தயார் செய்து வைத்துள்ளார்' என எத்னால் கூறினார்.
இதையே காங்கிரசார் அஸ்திரமாக பயன்படுத்தினர். 1,000 கோடி ரூபாய் தயார் செய்து வைத்திருப்பது யார் என்பது குறித்து, விசாரணை நடத்தும்படி அரசை வலியுறுத்தினர்.
தர்ம சங்கடம்
இது பா.ஜ., மேலிடத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மாநில பொறுப்பாளர் மூலம், எத்னாலை எச்சரித்தது. ஆனால், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை எத்னால் வசை பாடாத நாளே இல்லை.
எத்னாலை அடக்கி வைக்கும்படி, மாநிலத் தலைவர் விஜயேந்திரா மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்தும், மேலிடம் மவுனமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த மவுனம், தொண்டர்களுக்கு அதிருப்தி அளித்தது.
'கட்சியின் இமேஜ் பாதிக்கும்படி பேசும் எத்னால் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, தொண்டர்கள் பேசத்துவங்கினர்.
இதையடுத்து, விளக்கம் கேட்டு எத்னாலுக்கு பா.ஜ., ஒழுங்கு பாதுகாப்பு கமிட்டி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் பதில் அனுப்பினாலும் கட்சியை விமர்சிப்பதை நிறுத்தவில்லை.
பொறுமையிழந்த மேலிடம், எத்னாலை ஆறு ஆண்டுகள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காங்கிரஸ் குஷி
பிரபலமான பஞ்சமசாலி சமுதாய தலைவரான எத்னால், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டதால், காங்கிரசார் குஷி அடைந்துள்ளனர். அவரை கட்சிக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் பின் ஒருவராக அவரை சந்தித்துப் பேசுகின்றனர்.
ஹூப்பள்ளியின் தனியார் ஹோட்டலில், தார்வாட் ரூரல் காங்கிரஸ் தலைவர் அனில்குமார், நேற்று காலை எத்னாலை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் தரப்பில் அவரை இழுக்க முயற்சி நடந்து வரும் அதே வேளையில், பா.ஜ., தரப்பிலும் சமாதானப்படுத்தும் முயற்சியும் தொடர்கிறது.
இவை அனைத்தும் ரகசியமாக நடந்து வருகிறது. வரும் நாட்களில் அவரை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சி தீவிரமடைய வாய்ப்புள்ளது.
எத்னால் காங்கிரசில் இணைய விண்ணப்பித்தாலும், அவரை எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வது கஷ்டம். எங்கள் கட்சியின் கொள்கை, சித்தாந்தம் வேறு. அவர் ஒரு மதத்தவரை பற்றி மிகவும் அவமதித்து பேசியுள்ளார். எங்கள் கட்சியில் இணைய விரும்பி, அவர் விண்ணப்பிக்கவில்லை. எனவே இது பற்றி விவாதிக்க வேண்டாம்.
- எம்.பி.பாட்டீல்,
அமைச்சர், தொழிற்துறை
மேலும்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது