விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., போராட்டம்

பெங்களூரு: ''மாநில காங்கிரஸ் அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, பா.ஜ., சார்பில், நாளை சுதந்திர பூங்காவில் பகல் - இரவு போராட்டம் நடத்தப்படும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவித்தார்.

பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்றை தவிர, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது.

போராட்டம்



ஒரு யூனிட் மின்சாரம் 36 பைசாவும்; பால் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளன. முத்திரை வரி, பிரமாண பத்திரம், தொழில்முறை வரி, விதைப்பு விதைகளின் விலை, பேருந்து கட்டணம், தண்ணீர் கட்டணம், பெட்ரோல் விலை என அனைத்தும் அதிகரித்துள்ளன.

மாநிலத்தை ஆட்சி கட்டிலில் அமர வைத்த வாக்காளர்களுக்கு, சாபம் பிடித்துள்ளது. ஏழைகளை ஒடுக்கும் மாநில அரசுக்கு எதிராக, நாங்கள் போராடுவோம்.

ஏப்., 2ம் தேதி காலை 11:00 மணிக்கு சுதந்திர பூங்காவில் போராட்டத்தை துவக்குவோம். இப்போராட்டம், நாளை பகல் முழுதும்; இரவிலும் நீடிக்கும்.

கட்சியின் அனைத்து பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்பர். 5ம் தேதி மாவட்டம், மண்டல அளவில் போராட்டம் நடத்துவோம்.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில், விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிராமப்புற மருத்துவ செலவுகள் அதிகரித்துள்ளன.

அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும்; முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த உயர்வை, மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.

கோப யாத்திரை



எஸ்.சி., - எஸ்.டி., திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணத்தை கல்வி, சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அது போன்று செய்யவில்லை.

இதை கண்டித்து, வரும் 7ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா ஆகியோருடன் பேசி உள்ளோம். மைசூரில் 7ம் தேதி 'மக்கள் கோப யாத்திரை' துவங்குகிறது.

அங்கிருந்து புறப்பட்டு சாம்ராஜ் நகர்; 8ல் மாண்டியா, ஹாசன்; 9ல் குடகு, மங்களூரு; 10ல் உடுப்பி, சிக்கமகளூரில் பாதயாத்திரை நடத்துகிறோம்.

இரண்டாம் கட்டமாக ஏப்., 13ல் ஷிவமொக்காவில் புறப்பட்டு, உத்தர கன்னடாவில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதுபோன்று நான்கு கட்டமாக காங்கிரஸ் அரசை எதிர்த்து பேராட்டம் நடத்துகிறோம்.

தனித்து



இப்போராட்டத்தில் ம.ஜ.த., பங்கேற்காது. அவர்கள் வேறு விதத்தில் போராட்டம் நடத்துவர். பட்ஜெட்டில் சிறுபான்மையினரை மகிழ்விப்பதற்காக, ஹிந்துக்களை முதல்வர் சித்தராமையா அவமதித்துள்ளார். வெளிநாட்டில் தங்கி படிக்கும் முஸ்லிம் மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகையை 20 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளார்.

முஸ்லிம் பெண்களின் தற்பாதுகாப்புக்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இமாம்களின் ஊதியத்தையும் அதிகரித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு பா.ஜ., எதிரான கட்சியல்ல. அவர்களுக்கு மட்டும் ஏன் செய்கிறார் என்பதே எங்கள் கேள்வி.

அனைத்து மதம், ஜாதியினருக்கும் சமமான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்துகிறார்.

அதையே மாநில அரசும் செய்ய வேண்டும். எனவே, சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டை 'முஸ்லிம் பட்ஜெட்' என்றோம்.

பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை சபாநாயகர் காதர், திரும்பப் பெறவில்லை. அதுவரை எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் யாரும், சட்டசபை கமிட்டி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement