ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை

பெங்களூரு: தேசிய ஒருமைப்பாட்டுக்காக, தமிழகம் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர், பெங்களூரு வந்தடைந்தனர். இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை நடத்துகின்றனர்.

தேவகோட்டை திருச்செந்துார் பாதயாத்திரை குழு அறக்கட்டளை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டுக்காக, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு மார்ச் 3ம் தேதி 25 பேர் கொண்ட பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர்.

இக்குழுவினர், 118 நாட்கள், ஏழு மாநிலங்கள் வழியாக, 40 நதிகள் வழியாக 2,500 கி.மீ., பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இக்குழுவினர், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம், பெங்களூரு ஹொசா ரோட்டில் உள்ள செட்டி முருகன் கோவிலில் தங்கினர். இன்று அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு, சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள காசி விஸ்வநாதேஸ்வரர கோவிலுக்கு வருகின்றனர். அங்கு காலை 7:00 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், அதே சாலையில் உள்ள பஞ்சாரா பவனுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு ராமேஸ்வரத்தில் பூஜை செய்யப்பட்ட வேலுக்கு, இங்கேயும் பூஜை நடக்கிறது.

இன்று மாலையில் சிவாஜி நகரில் இருந்து புறப்பட்டு, எலஹங்காவில் ஓய்வெடுக்கின்றனர். ஏப்., 2ம் தேதி அதிகாலை புறப்பட்டு தேவனஹள்ளி; 3ம் தேதி சிக்கபல்லாபூர்; 4ம் தேதி ஹரோபண்டே; 5ம் தேதி பெரசந்திரா செல்கின்றனர். அங்கிருந்து ஆந்திரா மாநிலத்துக்குச் செல்கின்றனர்.

இக்குழுவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே பங்கேற்றுள்ளனர். தினமும் அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு 20 கி.மீ., நடக்கின்றனர். ஓய்வெடுத்த பின், மீண்டும் மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, 15 கி.மீ., பாதயாத்திரை செல்கின்றனர்.

மேலும் விபரங்களுக்கு சுவாமிநாதன் 94839 55183 என்பவரின் மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement