சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி

1


புதுடில்லி: சிமென்ட் உற்பத்தி துறையில் நுழைந்து, பல நிறுவனங்களை கையகப்படுத்தி வரும் அதானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமங்களின் பார்வை, தற்போது ஒயர் மற்றும் கேபிள் துறையின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், இத்துறையில் போட்டி தீவிரமடையும் என, கருதப்படுகிறது.

இம்மாத துவக்கத்தில், கவுதம் அதானி தலைமையிலான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனமான 'கட்ச் காப்பர்' வாயிலாக, 'பிரனிதா வெஞ்சர்ஸ்' உடன் இணைந்து, 'பிரனிதா இகோ கேபிள்ஸ்' என்ற கூட்டு தொழில் நிறுவனத்தை உருவாக்கியது. இது உலோகப் பொருட்கள், கேபிள்கள் மற்றும் ஒயர்களை தயாரித்து விற்பனை செய்யும்.



இதற்கு முன்பாக, குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமத்தின் சிமென்ட் நிறுவனமான அல்ட்ராடெக், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, அடுத்த இரு ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாய் முதலீட்டில், ஒயர் மற்றும் கேபிள் பிரிவில் நுழைய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


குஜராத்தில் உள்ள பரூச் அருகே இதற்கான ஆலை அமைகிறது. இது வருகிற 2026 டிசம்பரில் உற்பத்தியை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கட்டட கட்டுமான பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இத்தகைய நடவடிக்கைகளை இரு குழுமங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவை இரண்டும் ஏற்கனவே காப்பர் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிர்லா குழுமம் ஏற்கனவே பிர்லா ஓபஸ் என்ற பிராண்டின் கீழ், பெயின்ட் வணிகத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து தொழில்துறையினர் தெரிவித்து உள்ளதாவது: ஒயர் மற்றும் கேபிள் துறைக்கு வலுவான தேவை உள்ளது. இப்பிரிவில் 30 சதவீத தொழில்கள் இன்னும் ஒழுங்கமைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஒயர் மற்றும் கேபிள் துறையின் மதிப்பு, வரும் 2029 நிதியாண்டில் 1.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.

Advertisement