தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!

1


சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று (ஏப்ரல் 01) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,510க்கு விற்பனை ஆகிறது.


சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,360 ரூபாய்க்கும், சவரன் 66,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 113 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை, எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் ரூ.67,600 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று (ஏப்ரல் 01) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080க்கு விற்பனை செய்யப் படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,510க்கு விற்பனை ஆகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.10 ஆயரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.



இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், அவற்றின் நட்பு நாடுகளும் இணைந்து, தங்கள் வசம் உள்ள அமெரிக்க டாலர்களை கொண்டு, பெருமளவில் தங்கம் வாங்கி குவிக்க துவங்கி உள்ளன.


இதனால், சர்வதேச சந்தையில் டாலர் புழக்கம் அதிகரித்து, அதன் மதிப்பு சரிந்தது; தங்கம் விலை உயர்ந்தது. வரும் நாட்களில் தங்கம் புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும். இதேநிலை தொடர்ந்தால், விரைவில் சவரன் 80,000 ரூபாயை எட்டிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement