குத்துச்சண்டை: அரையிறுதியில் ஜடுமானி

புதுடில்லி: உலக குத்துச்சண்டை கோப்பை அரையிறுதிக்கு ஜடுமானி முன்னேறினார்.
பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் நடக்கிறது. 6 நாள் நடக்கும் இத்தொடரில் 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள புதிய எடைப் பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முதல் தொடர் இது.
50 கிலோ பிரிவு காலிறுதியில், 20 வயதான, இந்தியாவின் தேசிய சாம்பியன் ஜடுமானி சிங், உலக கோப்பை குத்துச்சண்டையில் 2024ல் வெள்ளி வென்ற பிரிட்டனின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை சந்தித்தார். இதில் ஜடுமானி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதில் முன்னாள் ஆசிய சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோவை சந்திக்க உள்ளார்.
ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்தியாவின் நரேந்தர் பெர்வல் (+90 கிலோ), காலிறுதியில் கஜகஸ்தான் வீரர் சபார்பே டேனியலிடம் 2-3 என தோல்வியடைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் நிகில் துபே (75), பிரேசிலின் காவ் பெலினியிடம் 0-5 என வீழ்ந்தார். இந்திய வீரர் ஜக்னுா (85), 1-4 என பிரான்சின் அப்துலயேவிடம் தோல்வியடைந்தார்.

Advertisement