பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்


பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்

கரூர்:திருமுக்கூடலுார், அம்பேத்கர் நகரில் பராமரிப்பின்றி சமுதாய கூடம் பூட்டி கிடக்கிறது.கரூர் ஊராட்சி ஒன்றியம், சோமூர் பஞ்சாயத்துக்குட்பட்ட திருமுக்கூடலுார் அம்பேத்கர் நகரில், 2019-20ம் ஆண்டில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் திறக்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். சில ஆண்டுகள் மட்டுமே சமுதாய கூடம் பயன்பாட்டில் இருந்தது. தற்போது பராமரிப்பு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, சிறந்த இடமாக சமுதாய கூடம் இருந்து வந்தது. இங்கு அதிகபட்சமாக, 1,500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
தற்போது, வளாகத்தை சுற்றிலும் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. பூட்டியே கிடப்பதால், சமூக விரோத கும்பலின் புகலிடமாக மாறியுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சமுதாய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement