தற்கொலைக்கு முயன்ற பெண்களை காப்பாற்றிய போலீசுக்கு வெகுமதி

சென்னை,
மெரினா காவல் நிலைய ஏட்டு குமரேசன், போலீஸ்காரர்கள் சங்கர்குமார், முருகன் ஆகிய மூவரும், 30ம் தேதி இரவு, மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இரண்டு பெண்கள், கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அவர்கள் பார்த்தனர்.

விரைந்து சென்ற போலீஸ்காரர்கள், இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்டு, மணல் பரப்பிற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில், தாய் - தந்தை இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்ததால், மனமுடைந்த அவர்கள் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, மீட்கப்பட்ட பெண்கள் இருவரையும், அவர்களது ஒப்புதலுடன் உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

சிறப்பாக செயல்பட்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்களை மீட்ட மெரினா போலீசார் மூவரையும், கமிஷனர் நேற்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Advertisement