பாஸ்போர்ட் மோசடி துணை நடிகை ஷர்மிளா தாபா மீது வழக்கு

சென்னை, பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்ட சினிமா துணை நடிகை ஷர்மிளா தாபா மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஷர்மிளா தாபா, 35. சின்னத்திரையில் பல நாடகங்கள் மற்றும் வெப் தொடர்கள் நடித்து பிரபலம் ஆனவர்.

நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம், வேதாளம்' ஆகிய படங்களிலும், நடிகர் ஜெயம் ரவியுடன் 'சகலகலா வல்லவன்' படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலக அதிகாரிகள், நடிகை ஷர்மிளா தாபா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து உள்ளனர்.

புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரை, இந்திய பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு, நடிகை ஷர்மிளா தாபா அண்ணா நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், புதியதாக பாஸ்போர்ட் காரி விண்ணப்பித்த அவர், வியாசர்பாடி முகவரி கொடுத்துள்ளார். விசாரணையில், பெரம்பூரில் வசித்து வருவது தெரியவந்தது.

நேபாள நாட்டைச் சேர்ந்த நடிகை ஷர்மிளா தாபா, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட பாஸ்போர்ட்டுக்கு தேவையான ஆவணங்களை போலியாக சமர்ப்பித்துள்ளார்.

சட்டவிரோதமாக 2021ம் ஆண்டு முதல் பாஸ்போர்ட் இல்லாமல், எவ்வாறு நடிகை தாபா வசித்து வந்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

***

Advertisement