* கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் அச்சம் புழுக்களும் நெளிவதால் தொற்று அபாயத்தில் மக்கள்

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம் நடப்பதாகவும், அதில் செந்நிற புழுக்கள் நெளிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடைகாலத்தில் சுகாதாரமற்ற நீரை பருகினால், பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் என்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுகாதாரமான குடிநீர் வழங்குவதை, குடிநீர் வாரியம் உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்து.

சென்னை மாநகராட்சி பகுதிகளில், தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, 7,268 கி.மீ., நீளத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக, மழை காலங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கலங்கலாக வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

அப்போது, சுகாதாரமாக குடிநீர் வழங்கும் வகையில், குளோரின் கலப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையின் பல பகுதிகளில், சில நாட்களாக குடிநீர் கலங்கலாகவும், கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடனும் வருகிறது. ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீருடன் புழுக்களும் வருகின்றன. இந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு, பல்வேறு உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கடல் நீரை குடிநீராக்கி, துாய்மையான குடிநீர் தருவதாக கூறப்படும் பகுதிகளிலும், இதே நிலைதான் தொடர்கிறது.

குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், உரிய நடவடிக்கை இல்லை. இதனால், சுகாதாரமற்ற குடிநீரை பருகினால், உடல் நல பாதிப்புகளும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், பகுதிவாசிகள் கேன் குடிநீருக்கு மாறி வருகின்றனர். அதுவும் பாதுகாப்பானதாக இருப்பதில்லை.

காரணம் என்ன?

விரிவாக்கத்திற்கு முந்தைய மண்டலங்களில் குடிநீர் இரும்பு குழாய்கள் பதித்து, 25 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகின்றன. இவை, 3 முதல் 4 அடி வரை பள்ளத்தில் பதிக்கப்பட்டன. சாலை மட்டம் உயர்ந்ததால், 7 அடி ஆழத்தில் குழாய்கள் உள்ளன.

குடிநீர், கழிவுநீர் குழாய்கள் 1 அடி இடைவெளியில் உள்ளன. சேவை துறைகள் பள்ளம் தோண்டும்போது, குழாய் சேதமடைந்து, அதில் கழிவுநீர் புகுந்து மாசடைந்த குடிநீராக வருகிறது.

கடந்த மாதம், 21 முதல் 26ம் தேதி வரை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

அப்போது, குழாய் காலியாக இருந்தது. துருப்பிடித்த இரும்பு குழாய்களில் உள்ள ஓட்டை, விரிசல் வழியாக உள்ளே புகுந்து தேங்கி நின்ற கழிவுநீருடன், குடிநீர் விடும்போது மாசடைகிறது. அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பகுதிகளில், இந்த பிரச்னை தொடர்கிறது.

ஒருங்கிணைப்பு இல்லை

ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார், மாதவரம், வளசரவாக்கம் மண்டலங்களில், பல வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.

இதற்காக பள்ளம் தோண்டும்போதும், ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து, கழிவுநீர் கலக்கிறது.

பல்வேறு துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, முறையாக கண்காணிப்பு இல்லாதது, சேதமடைந்த குழாய்களை பெயரளவுக்கு சரி செய்வது போன்ற பிரச்னைகளால், மாசடைந்த குடிநீரை பருக வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கடல் நீரை குடிநீராக்கும் திட்ட குடிநீர், கண்ணாடி போல் தெளிவாக இருக்கும். சில நேரங்களில், கடல் குடிநீரை நிறுத்தி, வீராணம் ஏரி நீர் வழங்கும்போது, லேசான செம்மண் நிறுத்தில் தெரியும். இதனால், எந்த பாதிப்பும் இல்லை.

சேதமடைந்த குழாய் வழியாக கழிவுநீர் கலந்தால்தான் சுகாதார பிரச்னை ஏற்படும். பல மண்டலங்களில், வடிகால், கேபிள் பதிப்பு பணிக்காக பள்ளம் தோண்டும்போது, சேதமடையும் குழாயில் பிரச்னை உள்ளது. அதை சரி செய்ய, சேவை துறைகளுடன் பேசி வருகிறோம்.

குடிநீருடன் புழுக்கள் வந்த பகுதிகளில், குடிநீரை பிடித்து ஆய்வுக்கு அனுப்பப்படும். குழாயும் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடிநீரை ஒரு நாள் நிறுத்தினால், கலங்கல், கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்னை ஏற்படுவது இல்லை. சமீபத்தில், ஆறு நாட்கள் சுழற்சி முறையில் நிறுத்தப்பட்டது.

குடிநீர் வரும் நாட்களில், நீரோட்டமும் குறைவாக இருந்தது. முன்பு மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்புக்காக குடிநீர் நிறுத்தப்படும். இப்போது, ஒன்று, ஒன்றரை மாதம் வீதம் நிறுத்தப்படுகிறது.

அதுபோல், கடல்நீரை நிறுத்தும்போது, ஏரிநீர் வந்தது. இப்போது, ஏரிநீர் வருவதில்லை. குடிநீரை சீராக வினியோகம் செய்வதை உறுதி செய்தால், கழிவுநீர் கலப்பு பிரச்னை இருக்காது.

- எஸ்.குமாரராஜா, வேளச்சேரி.



துறை எச்சரிக்கை

வீடுகள், பெரு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும், 20 லிட்டர் குடிநீர் கேன்களை, 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்துவதால், அதன் மைக்ரோ பிளாஸ்டிக், உடலின் ரத்ததில் கலக்க வாய்ப்புள்ளது. அதேபோல், அதிகமான கீறல், அழுக்கு நிறைந்த கேன்களையும் பயன்படுத்தக்கூடாது. நேரடி சூரிய ஒளியில் குடிநீர் கேன்களை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால், கேனில் உள்ள பிளாஸ்டிக், சிதைவுக்கு உள்ளாகி, அதன் துகள்கள் குடிநீரில் கலக்கின்றன.எனவே, சுகாதாரமான குடிநீரை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிமமும் ரத்து செய்யப்படும்.- உணவு பாதுகாப்பு அலுவலர், சென்னை.


- நமது நிருபர் -

Advertisement