மேஜர் முகுந்த் திருவுருவ சிலை பருத்திப்பட்டில் நிறுவ கோரிக்கை

ஆவடி, ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியை பூர்விகமாக கொண்டவர் வரதராஜன் - கீதா தம்பதியர். கடந்த 1983 ஏப்., 12ம் தேதி, இவர்களுக்கு மகனாக பிறந்தவர் முகுந்த் வரதராஜன். அதற்கு பின், அவர்களது குடும்பம், தாம்பரத்திற்கு குடிபெயர்ந்தது.
முகுந்த் வரதராஜன், இளங்கலை வணிகவியல் மற்றும் இதழியல் பட்டப்படிப்பு முடித்தார். இவரது தாத்தா மற்றும் இரு மாமன்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இது, முகுந்த் வரதராஜனை ராணுவத்தில் சேர துாண்டியது.
ராணுவத்தில் பயிற்சி பெற்று 2006ல், ராஜ்புத் படைப்பிரிவில் லெப்டினன்ட்டாக பணியாற்றினார். கடந்த 2008ல் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், 2012 அக்., 18ம் தேதி, மேஜராக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், கடந்த 2014 ஏப்., 25ம் தேதி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இந்த மாதம் 25ம் தேதியுடன் மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்து, 10 ஆண்டுகளாகின்றன.
அவரது வீர மரணத்தை பறைசாற்றும் விதமாக, பருத்திப்பட்டு, 'கேந்திரிய விஹார்' குடியிருப்பு அருகில் உள்ள பூங்காவிற்கு, அவரது பெயர் சூட்டி அங்கு அவரது திருவுருவ சிலை திறக்க வேண்டும் என, முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.