ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே ரூ.233 கோடியில் உயர்மட்ட பாலம் * அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை,
''தாம்பரம் கிழக்கு கடற்கரை சாலையின் தொடர்ச்சியாக, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே, 233 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று, பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, எண்ணுாரில் இருந்து பூஞ்சேரி வரை கடல் வழி பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, 2 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும்

* தாம்பரம் கிழக்கு கடற்கரை சாலையின் தொடர்ச்சியாக, பெரும்பாக்கம் முதல் மாடம்பாக்கம் சந்திப்பை இணைக்கும் வகையில், ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே, 233 கோடி ரூபாயில், உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்

* ராஜகீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம்தென் வழியாக, பெருங்களத்துார் மார்க்கத்தில், 1,400 மீட்டர் நீளத்திற்கு, 25 கோடி ரூபாயில் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்

* வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில், கொரட்டூர் மற்றும் பாடி வழியாக செல்ல, 14 கோடி ரூபாயில், 'யூ' வடிவ சேவை சாலை அமைக்கப்படும்

* திருவான்மியூர் முதல் கொட்டிவாக்கம் வரை கிழக்கு கடற்கரை சாலை, 81 கோடி ரூபாயில், ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்

* சென்னை அம்பத்துார் ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படும்

* மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு பாதையான ரயில்வே கேட் எண் 45, சிங்கப்பெருமாள்கோவில் ரயில்வே கேட் எண் 49 ஆகியவற்றில், ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்

* திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு நகரில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

***

Advertisement