கோமுகி ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மக்கள் அவதி: விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுற்று வட்டாரத்திலும் பல்வேறு கிராமங்கள் உள்ளன.

பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக கள்ளக்குறிச்சிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் படிப்பிற்காக வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் குறுகிய வழியாக செல்லும் வகையில், கோமுகி ஆற்றை கடந்து காரனுார் பஸ் நிறுத்தம் வழியாக செல்கின்றனர்.நடந்தும், இரு சக்கர வாகனங்கள் மூலமும் ஆற்றை கடக்கின்றனர். இந்நிலையில் கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றை கடக்கும் போது கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

பருவ மழையில் கோமுகி அணையில் தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும்.

அப்போது சோமண்டார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள், மே.வன்னஞ்சூர், ரோடுமாந்துார் சாலை வழியாக நீண்ட துாரம் சுற்றி செல்கின்றனர்.

விபத்து அபாயம்



இதற்கிடையே ஆற்றில் குறைவாக தண்ணீர் செல்லும் போது, நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்பட்டு தண்ணீரில் ஆற்றை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தை உணராமல் கடும் சிரமங்களுடன் சிலர் ஆற்றை கடக்கின்றனர். அத்தருணத்தில், அங்குள்ள கற்களில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லும் அபாயமும் உள்ளது.

தற்போது ஆற்றின் அருகே கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. கல்லுாரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.

கல்லுாரிக்கு காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போதிய பஸ் வசதியின்மையால் பெரும்பாலான மாணவர்கள் நடந்தே சென்று வருகின்றனர்.

ஆற்றில் நீர் வரத்து இல்லாதபோது மோ.வன்னஞ்சூர், மோகூர், ரோடுமாமந்துார், வாணியந்தல், அகரகோட்டாலம், சிறுவங்கூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சோமண்டார்குடி கிராமம் வழியாக வந்து கரடு முரடான ஆற்றை கடந்து மற்றொரு திசையில் உள்ள கல்லுாரிக்கு செல்கின்றனர்.மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது நீண்டதுாரம் சுற்றி வருகின்றனர்.

பாலம் அமைக்க கோரிக்கை



இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சங்கராபுரம் சாலை மார்க்கத்திலிருந்து வரும் மாணவர்கள், கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கச்சிராயபாளையம் செல்லக்கூடிய பஸ்களில் ஏறி காரனுாரில் இறங்கி நீண்ட துாரம் நடந்து செல்கின்றனர். இதனால் 6 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பட்சத்தில், தனியார் மினி பஸ்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களின் போக்குவரத்தும் கல்லுாரி வழியாக அதிகரிக்க கூடும்.

கல்லுாரி மாணவர்கள் சிரமமின்றி சென்று வர வாய்ப்பாக அமையும்.. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement