வடிகால் வசதி இல்லாததால்சாலையில் தேங்கும் கழிவுநீர்


வடிகால் வசதி இல்லாததால்சாலையில் தேங்கும் கழிவுநீர்


கரூர்:கரூர், அரசு மருத்துவக் கல்லுாரியை ஒட்டியுள்ள சாலையில், வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர், அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தோல், இருதயம் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 880 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில், 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதனால், கல்லுாரியை சுற்றி ஏராளமான உணவகங்கள் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன.
இதில், வடக்கு காந்திகிராமம் கரூர் - திருச்சி சாலையில் இருந்து, மருத்துவக் கல்லுாரி சாலை செல்கிறது. இந்த சாலையில், சாக்கடை வடிகால் வசதி இல்லாததால், இங்குள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் கல்லுாரி ஒட்டியுள்ள பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement