பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமில்லா கழிப்பறைக்கு ரூ.5,000 அபராதம்


பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமில்லா கழிப்பறைக்கு ரூ.5,000 அபராதம்

தர்மபுரி:தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டபோது, கழிப்பறைகள் சுகாதாரமில்லாமல் இருந்ததால், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான முறையில் இயக்கப்படுவது மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைமேடைகளில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பு குறித்து, ஆய்வு மேற்கொண்டார். மேலும், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் உள்ள, உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
அறிவுறுத்தினார்.இந்நிலையில், தர்மபுரி பஸ் ஸ்டாண்டிலுள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என, கலெக்டர் ஏற்கனவே அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. எனவே, கழிப்பறையை முறையாக பராமரிக்காத தனியார் ஒப்பந்ததாரருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், துாய்மை படுத்தி தவறுகள் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ள எச்சரித்தார்.

Advertisement