விழுப்புரத்தில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். யுனிகா மல்டி ஸ்பெசாலிட்டி தெரபி சென்டர் இயக்குநர் உதயநிதி, விளையாட்டு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில், 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெருந்திட்ட வளாகம், திருச்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை வழியாக மீண்டும் பெருந்திட்ட வளாகம் வரை மாரத்தான் ஓட்டம் நடந்தது.
மாரத்தான் நிறைவாக, முதலில் வந்த 20 நபர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. மாணவர்கள் கோகுலகண்ணன் முதல் பரிசு ரூ.5,000ம், பூவரசன் இரண்டாம் பரிசு ரூ.3,000ம், நாகராஜ் மூன்றாம் பரிசு ரூ.2,000ம், கோப்பை, பதக்கங்கள் மற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.