கொல்லங்கோடு கோவிலில் துாக்க நேர்த்திக்கடன்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று, 1,175 குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்- கேரள எல்லையான கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் தூக்கத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டியும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வாழ வேண்டியும், இந்த நேர்த்திக்கடன் நடத்தப்படுகிறது.
45 அடி உயரம் கொண்ட இரண்டு தூக்க மரத்தின் மேல் முனையில் கட்டப்பட்டுள்ள நான்கு தூக்கவில்லில் குழந்தைகளை ஏந்தி செல்லும் தூக்ககாரர்கள் துணிகளால் இடுப்பில் கட்டப்படுவர். பின்னர் இவர்களின் கையில் நேர்ச்சை குழந்தைகள் கொடுக்கப்படுவர்.
இதைத்தொடர்ந்து தூக்க மரம் 20 அடி உயரத்தில் எழும்பிய பின், தேர் போன்ற தூக்க வண்டியை பக்தர்கள் இழுத்து கோவிலை ஒருமுறை வலம் வரும்போது நான்கு குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நிறைவேறும். இந்த ஆண்டு 1,175 குழந்தைகள் முன்பதிவு செய்து இருந்தனர். இதற்காக, 294 முறை இந்த தூக்க வண்டி கோவிலை வலம் வந்தது. குழந்தைகளை, இரண்டு கைகளிலும் தாங்கிய படி தொங்குகிற தூக்கக்காரர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நேற்று காலை 6:30 மணி முதல் தூக்க வண்டி ஓட துவங்கியது. இன்று அதிகாலை வரை கோவிலை வலம் வந்து தூக்க நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. இவ்விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொல்லங்கோட்டுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆராட்டுடன் விழா இன்று நிறைவு பெறுகிறது.