அவதூறு வழக்கில் ஆஜர் பழனிசாமிக்கு சம்மன்
கோவை:முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென, சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, கடந்தாண்டு, ஜூன் 13ம் தேதி, கோவை விமான நிலையம் வந்த போது, பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, அவரிடம் கேள்வி எழுப்பினர்.
பதில் அளித்த பழனிசாமி, ' போறவங்க, வர்றவங்க எல்லாம் ஒரு குழு அமைச்சா, பதில் சொல்லிட்டு தான் இருக்கோணும். அவங்க யாரு சொல்லுங்க பார்க்கலாம். அவங்க என்ன குழு, யாரோ ஒருத்தர், கோயம்புத்துார்காரர், அவர் எங்கிருந்தார். அவர் கட்சியிலேயே கிடையாது. ஓ.பி.எஸ்., இருக்கும்போது போய் சேர்ந்தார். அதற்கு முன்னாடி உறுப்பினரே கிடையாது. அவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சுட்டு நீங்க கேக்குறீங்க' என்று பதில் அளித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது, அக்கட்சியின் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, கோவை ஜே.எம்:1, கோர்ட்டில், 2024, ஜூன் 25ல் அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், 'என்னைப் பற்றி அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறார். 1971ல் இருந்து கட்சியில் உறுப்பினராக உள்ளேன். 1984ல் எம்.எல்.ஏ.,வாகவும், 1989ல் எம்.பி., ஆகவும் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தரக்குறைவாக பேட்டி கொடுத்துள்ளார். அவர் மீது தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்து, தண்டனை அளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கே.சி.பழனிசாமி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவதுாறு வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி கோர்ட்டில் ஆஜராக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணை வரும் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.