அமைச்சர் அடிக்கல் நாட்டிய திட்டம் அப்படியே கிடக்குது
சாயல்குடி : சாயல்குடியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அடிக்கல் நாட்டிய திட்டம் நான்கு ஆண்டுகளாகியும் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது.
சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் போக்குவரத்து பணிமனை அமைப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021ல் அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் போக்குவரத்து பணிமனைக்காக அவ்விடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்.
இந்நிலையில் அரசு ஒதுக்கீடு செய்த போக்குவரத்து பணிமனைக்கான இடம் எவ்வித பயன்பாடின்றி திட்டம் முடங்கிய நிலையில் உள்ளது. அவ்விடத்தில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்தும் இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறியது.
இங்கு போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயனுள்ளதாக அமையும்.
சமீபத்தில் சென்னை சென்ற சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து பஸ் டெப்போ பணிமனைக்கான பணிகளை விரைந்து முடிக்க மனு அளித்துள்ளார்.