பரமேஸ்வரை சமாதானம் செய்த மல்லிகார்ஜுன் கார்கே

பெங்களூரு : டில்லியில் நடந்த கர்நாடக பவன் திறப்பு விழாவுக்கு தன்னை அழைக்காததால் அதிருப்தி அடைந்த, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமாதானப்படுத்தி உள்ளார்.

டில்லியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கர்நாடக பவன் திறப்பு விழா, கடந்த 3ம் தேதி நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், சில அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். இதுபற்றி அறிந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தன்னை சந்திக்கும்படி பரமேஸ்வருக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் கார்கேயை, பரமேஸ்வர் நேற்று சந்தித்தார்.

இருவரும் ஒரு மணி நேரம் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர். பின், பரமேஸ்வர் அளித்த பேட்டியில், ''கார்கேயை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் எனக்கு மூத்த சகோதரர். குடும்ப விஷயம் பற்றி பேசினோம். அரசியல் பேசவில்லை. கட்சியின் தலைவராக உள்ள அவரிடம், அனைத்து தகவலும் இருக்கும்,'' என்றார்.

ஆனால் அதிருப்தியில் இருக்கும் பரமேஸ்வரை, கார்கே சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இருவரும் மாநில அரசியல் நிலவரம் குறித்தும், எஸ்.சி., மாநாடு நடத்துவது பற்றியும், விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement