கர்ப்பத்தை கலைக்க கூறிய கணவர் மாமியார் உட்பட மூவர் மீது வழக்கு
பெரியகுளம் : கர்ப்பத்தை கலைக்க சொன்ன துபாயில் இருக்கும் கணவர் கவின் பிரசாத், கருக்கலைப்பு மாத்திரையை வாயில் போட்டு வற்புறுத்திய மாமியார், சின்ன மாமியார் மீது அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவானது.
பெரியகுளம் தென்கரை சுதந்திரவீதியைச் சேர்ந்தவர் ஸ்வானிகா 25. கணவரை பிரிந்து வாழ்ந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விராலிபட்டியைச் சேர்ந்த கவின்பிரசாத் 25. ஸ்வானிகாவை திருமணம் செய்தார். இருவரும் துபாய்க்கு வேலைக்கு சென்றனர். அங்கு ஸ்வானிகா கர்ப்பமானார். கவின்பிரசாத் தற்போது குழந்தை வேண்டாம் என கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளார். இதனால் ஸ்வானிகா வேலையை விட்டு பெரியகுளத்தில் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கவின்பிரசாத் தாயார் கீதாராணி 47. இவரது தங்கை உமா 46, ஆகியோர் ஸ்வானிகாவிடம் கருவை கலைக்க கூறி அவரது வாயில் கருக்கலைப்பு மாத்திரைகளை வற்புறுத்தி போட்டனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்வானிகாவிற்கு குழந்தை பிறந்தது. தன்னுடன் வாழ மறுத்தும், கருவை கலைக்க கூறி மன உளைச்சல் ஏற்படுத்திய கவின் பிரசாத், கீதாராணி, உமா மீது பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஸ்வானிகா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயராணி மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.