எம்புரான் படத்தில் பெரியாறு அணை சர்ச்சை; கண்டுகொள்ளாத தமிழக அரசு

36


கூடலுார்: எம்புரான்' மலையாள திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் உள்ளதை கண்டித்து தமிழக விவசாயிகள்,பல்வேறு கட்சித் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27ல் கேரளாவில் வெளியிடப்பட்டது. மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 29ல் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் சில காட்சிகளில் 'நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ஆங்கிலேயர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது. மேலும் மன்னர் மற்றும் ஆங்கிலேயர்கள் தற்போது இல்லாவிட்டாலும் இந்த அணையால் மக்களுக்கு ஆபத்து உள்ளது. அணையை காப்பாற்ற செக் டேம் என்னும் சுவர்களால் பயனில்லை. இந்த அணையே இல்லாமல் இருந்தால்தான் சரியாகும்' என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.



நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாக கூறினாலும் 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட அணை முல்லைப் பெரியாறு மட்டுமே. அணையில் நீர்மட்டம் 142 அடியாக தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதை அவமதிக்கும் வகையில் கேரளாவில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மழை அதிகரித்து அணை நீர்மட்டம் உயரும்போது அணை உடைவது போன்ற கிராபிக் காட்சிகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும் கேரளாவில் உள்ள சில அமைப்புகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.


2011 நவம்பரில் 'டேம் 999' என்ற திரைப்படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையிப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த மோகன்ராய் இப்படத்தை இயக்கியிருந்தார். அணை உடைந்தால் ஏற்படும் அழிவுகளை மையக் கருத்தாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. முல்லைப் பெரியாறு அணை குறித்து பிரச்னை இருந்த காலகட்டத்தில் இப்படம் மக்களை அச்சத்தில் ஏற்படுத்துவது போல் சித்தரித்துக் காட்டியிருந்தது.


இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் பெரியாறு அணை பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் உள்ளது. பல்வேறு நிபுணர் குழுக்களால் அணையை ஆய்வு செய்த பின் 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரளாவில் பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி வந்த போதிலும் திரைப்படம் மூலம் மேலும் பிரச்னையை பெரிதாக்கும் வகையில் கேரள தரப்பில் செயல்பட்டு வருகிறது.


எம்புரான் திரைப்படத்தில் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய வசனங்களை உடனடியாக நீக்க வலியுறுத்தி உசிலம்பட்டி, கம்பம் பகுதி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து திரையரங்குகளை முற்றுகையிடுவது ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.


பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழக அரசு எவ்வித கருத்தையும் பதிவு செய்யாமல் மவுனம் காத்து வருகிறது. கேரளாவில் ஆளும் கம்யூ., தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

தமிழகத்தில் படத்தை தடை செய்ய வேண்டும்




சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், கூடலுார்



தென் தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை குறித்து திரைப்படத்தில் உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக பூதகரமாகிக் கொண்டிருக்கும் இப்பிரச்னை குறித்து தமிழக திரைப்படத் துறையில் இருந்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கேரளாவில் குறும்படம், திரைப்படம் என அனைத்திலும் தற்போது இப் பிரச்னையை முன் வைக்க துவங்கிவிட்டனர்.


அணையில் 152 அடி தேக்கியே தீருவோம் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி ஒரு சதவீதம் கூட இதுவரை நிறைவேறவில்லை. கேரளாவில் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் நிலையில் தமிழக அரசும் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காதது அதிருப்தி அளிக்கிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ள எம்புரான் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

Advertisement