பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் உரசல்

பெங்களூரு,: “தேவையில்லாத நேரத்தில் எங்களை துாக்கி எறிகின்றனர்,” என, பா.ஜ., மீது, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணியில் உரசல் ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, பெங்களூரில் பகல் - இரவு போராட்டத்தை பா.ஜ., துவங்கி உள்ளது. ஆனால் கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த.,வுக்கு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.
இதுகுறித்து ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
நாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளோம். ஆனால் எங்கள் கட்சியுடன் ஆலோசிக்காமல் அரசுக்கு எதிராக பகல், இரவு போராட்டத்தை பா.ஜ., நடத்துகிறது. ஒருதலைபட்சமாக அவர்கள் முடிவு எடுக்கின்றனர்.
மாநில அரசுக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து போராடி இருக்க வேண்டும். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. தேவைப்படும்போது எங்களை பயன்படுத்துகின்றனர். தேவையில்லாதபோது துாக்கி எறிகின்றனர். கர்நாடக பா.ஜ., அணுகுமுறை பற்றி, அந்த கட்சியின் மேலிடம் கவனத்திற்கு கொண்டு செல்வோம். வரும் நாட்களில் எங்கள் கட்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குமாரசாமியுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுரேஷ்பாபுவின் இந்த அதிருப்தி பேச்சால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் உரசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே லோக்சபா தொகுதி பங்கீட்டின்போது, இரு கட்சிகளும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. “மூன்று தொகுதிகளை கூட கெஞ்சித் தான் வாங்க வேண்டுமா?” என, குமாரசாமி அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார். 'முடா' முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., நடத்திய பாதயாத்திரைக்கு கூட முதலில் ம.ஜ.த.,வுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
மகளிர் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
-
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி; கோப்பையை கைப்பற்றியது திருவள்ளூர்
-
மாவட்ட கிரிக்கெட்; என்.ஐ.ஏ., கல்வி நிறுவன அணி வெற்றி
-
அரசின் திட்டங்களுக்கு கணக்கு; கூட்டுறவு வங்கிகளில் அபாரம்
-
சைக்கிளிங் போட்டியில் சாதிக்கும் 'ஆட்டிசம்' மாணவர்! 'உடல் ஊனம் தடையில்லை' என்பதற்கு உதாரணம்
-
போதை மாத்திரைகளை கடத்திய 4 வாலிபர்கள் கைது