தடுப்பணையில் மூழ்கி மூவர் பலி

சிக்கபல்லாபூர் : சீனிவாச சாகர் தடுப்பணையில் மூழ்கி, ஒரே குடும்பத்தின் 3 பேர் இறந்தனர்.

சிக்கபல்லாபூர் டவுன் 17வது வார்டு பகுதியில் வசித்தவர் இம்ரான், 40. வேலை விஷயமாக பெங்களூரின் முனிரெட்டிபாளையாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ரம்ஜானையொட்டி சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

நேற்று மதியம் இம்ரான், அவரது குடும்பத்தினர் 10 பேர், சிக்கபல்லாபூர் அருகே நல்லகதிரேனஹள்ளி கிராமத்தில் உள்ள சீனிவாச சாகர் தடுப்பணைக்கு சென்றனர்.

இம்ரானின் உறவினர்களான பஷீரா, 43, பரீனா பேகம், 40 ஆகியோர் தடுப்பணையில் இறங்கி குளித்தனர். ஆழமான பகுதிக்கு தெரியாமல் சென்றுவிட்டனர். நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர்.

அவர்களை காப்பாற்ற இம்ரான் முயற்சி செய்தார். ஆனால் மூன்று பேரும் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தனர். இதை பார்த்து குடும்பத்தினர் கதறினர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டனர். சிக்கபல்லாபூர் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement